“நீட் கோச்சிங் செண்டர்கள் வருடத்திற்கு ரூ.5,400 கோடி சம்பாதிக்கிறாங்க” - திருமுருகன் காந்தி

“எதையும் மாற்றாமல் நுழைவுத் தேர்வை மட்டும் வைத்துவிட்டால் தரமான மருத்துவர்கள் வந்துவிடுவார்களா?” - திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்திpt web

நீட் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியா சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நேற்று நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிமின் அன்சாரி,

“கிராமப்புற மாணவர்களுக்கும் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் எதிரானதாக இருக்கும் நீட் தேர்வை தமிழ்நாடு மட்டுமின்றி அகில இந்திய அளவில் ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. தொடர்ந்து நீட் தேர்வுக்கு ஆதரவாக செயல்படக்கூடிய வகையிலும் தமிழ்நாடு மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் பேசிவரும் ஆளுநருக்கு எதிராக கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் எல்லோரும் ஒன்று கூடியுள்ளோம்” என்றார்.

திருமுருகன் காந்தி பேசுகையில், “நீட் தேர்வு, மருத்துவ படிப்பிற்கான தேர்வல்ல. அதற்கான நுழைவுத்தேர்வுதான். நுழைவுத்தேர்வை மாற்றி உள்ளீர்கள்... ஆனால் அதற்கான பாடத்திட்டத்தை மாற்றியுள்ளீர்களா? பரிசோதனை முறைகள், ஆய்வு முறைகளில் எதாவது மாற்றத்தை கொண்டு வந்துள்ளீர்களா? தேர்வு முறை எதாவது மாற்றியுள்ளீர்களா? எதுவும் இல்லை. எதையும் மாற்றாமல் நுழைவுத் தேர்வை மட்டும் வைத்துவிட்டால் தரமான மருத்துவர்கள் வந்துவிடுவார்களா?

நீட் தேர்வு
நீட் தேர்வுtwitter

நீட் கோச்சிங் சென்டர்கள் மட்டும் வருடத்திற்கு ரூ.5,400 கோடி சம்பாதித்துள்ளார்கள். தமிழ்நாட்டின் உயர்க்கல்விக்கான பட்ஜெட்டைவிட அதிகமாக சம்பாதிக்கின்றன கோச்சிங் செண்டர்கள். எனில் ஆளுநர் யாருக்காக பேசுகிறார்? யார் லாபத்துக்கு பேசுகிறார்? கோச்சிங் செண்டர்களுக்காக பேசுகிறார் என்பதே நாங்கள் வைக்கும் குற்றச்சாட்டு” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com