அடுத்தாண்டு ரஜினி கட்சி தொடங்குவார் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தை, போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழருவி மணியன், “ரஜினியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். அவரது உடல் நலன் குறித்து விசாரித்தேன்.
ரஜினி அடுத்த ஆண்டு கட்சியை தொடங்குவார். அதற்கான வாய்ப்புகள் அதிகம். அரசியல் ரீதியான கருத்து குறித்து ரஜினியே பேசுவார். ஆளுநர் ஆட்சி வரும் எனக் கூறவில்லை. ஊழல் செய்யும் ஆட்சி தொடர்ந்தால், வரும் தேர்தலில் பணம் அதிகமாக செலவு செய்ய நேரிடும். ரஜினி, கமல் இணைந்து செயல்படுவது குறித்து அவர்கள் இரண்டு பேருமே பேசிவிட்டார்கள். அதை நான் கூற முடியாது.
ஒ.பி.எஸ் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதிமுக என அவர் பொதுவாகத்தான் பேசினார். உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என தெரிகிறது. வார்டு வரையறை முறையாக செய்யவில்லை. ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக கைது நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது என்ற விமர்சனம் இருந்தாலும், சட்ட நடவடிக்கையின் படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பா.ஜ.க கூறுகிறது” எனத் தெரிவித்தார்.