"மேகதாதுக்கு அனுமதி தராதீர்கள். ஏனெனில்..." - மாநிலங்களவையில் தம்பிதுரை பேச்சு

"மேகதாதுக்கு அனுமதி தராதீர்கள். ஏனெனில்..." - மாநிலங்களவையில் தம்பிதுரை பேச்சு
"மேகதாதுக்கு அனுமதி தராதீர்கள். ஏனெனில்..." - மாநிலங்களவையில் தம்பிதுரை பேச்சு

“கர்நாடக அரசின் சர்ச்சைக்குரிய மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது” என்று மாநிலங்களவையில் இன்று (திங்கட்கிழமை) அதிமுக மாநிலங்களவை குழுத் தலைவர் தம்பிதுரை வலியுறுத்தினார். தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது எனவும், கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி காவிரி நதியில் மேகதாது அணை கட்டக் கூடாது எனவும் கூறி, மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோகக் கூடாது என மாநிலங்களவையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அறிக்கை தாக்கல் செய்தார் தம்பிதுரை. கர்நாடக அரசு மேகதாது அணை கட்டினால், தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், காவிரி டெல்டா பகுதியில் விளைச்சல் குறைந்துவிடும் எனவும் தம்பிதுரை விளக்கினார்.

"காவிரி டெல்டா பகுதி தமிழகத்தின் நெற்களஞ்சியமாக உள்ளது. தமிழகத்தின் உணவுப் பொருள் உற்பத்திக்கு இந்த விவசாய மண்டலம் முக்கிய பங்களிப்பை தொடர்ந்து அளித்து வருகிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், மேகதாது திட்டம் அமலானால், அது தமிழகத்தை மேலும் பாதிக்கும். குறிப்பாக காவிரி டெல்டா பகுதி மிகவும் கடுமையான பாதிப்பை சந்திக்க வேண்டிவரும்” என வலியுறுத்தினார் அவர்.

மழைக்கால கூட்டத்தொடரின் ஆரம்பம் முதலே தினசரி நாடாளுமன்றத்தில் அமளி காரணமாக ஒத்திவைப்புகள் நடைபெறுவதால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புகள் கிட்டவில்லை. இந்நிலையில், தம்பிதுரைக்கு இன்று முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து பேச வாய்ப்பு கிடைத்த நிலையில், அவர் மேகதாது அணை திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.

கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வரான பசவராஜ் பொம்மை மேகதாது திட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும் என வலியுறுத்தி வருகிறார். விரைவிலேயே மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர செகாவத்தை டெல்லியில் சந்தித்து இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கோர பொம்மை திட்டமிட்டுள்ளார். இந்த சூழ்நிலையில், தம்பிதுரை மாநிலங்களவை மூலம் மத்திய அரசுக்கு தமிழக விவசாயிகளின் எதிர்ப்பை தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சிகளும் மேகதாது அணை விவகாரத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ள நிலையில், தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர செகாவத் உள்ளிட்டோரை சந்தித்து, மேகதாது திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- கணபதி சுப்பிரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com