கே.ஆர்.பி அணை மதகு உடைப்பு 3 நாட்களில் சரி செய்யப்படும்: தம்பிதுரை
கிருஷ்ணகிரியில் உடைப்பு ஏற்பட்டுள்ள கே.ஆர்.பி அணையின் மதகு 3 நாட்களில் சரி செய்யப்பட்டு விடும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை மதகு உடைந்ததை அடுத்து துணை சபாநாயகர் தம்பிதுரை அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதகு உடைந்தது எதிர்பாராத ஒன்று. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்தார். கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். தென்பெண்ணையில் கர்நாடக அரசு அணைகட்ட தமிழக அரசு அனுமதிக்காது என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணை 52 அடி கொள்ளளவு கொண்டது. 51 அடிக்கு தண்ணீர் இருந்த நிலையில் அணையின் பிரதான மதகு பகுதியில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வருவதால் 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று கே.ஆர்.பி. அணையில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், வல்லுநர்கள் அணையை ஆய்வு செய்து வருகின்றனர்.