மணமகள் வீட்டில் முதல் பண்டிகை: தலைதீபாவளியின் தனிச்சிறப்பு
திருமணமாகி முதல் ஆண்டுக்குள் வரும் தீபாவளியை, தலைதீபாவளியாகக் கொண்டாடும் பழக்கம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அப்படி, இந்தாண்டும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் புதுமண தம்பதியினர் உற்சாகமாக தலைதீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும் தமிழகத்தின் கூடுதல் சிறப்பு தலைதீபாவளி. திருமணமாகி முதல் ஆண்டுக்குள் தம்பதியினருக்கு வரும் தீபாவளியைத் தான் தலைதீபாவளியாக கொண்டாடுவார்கள். தலைதீபாவளியின் முதல் நிகழ்வாக காலையில் எழுந்து, பெண் வீட்டில் பெண்ணும் கணவரும் எண்ணெய் வைத்து குளித்து புத்தாடை அணிவர். பின்னர் பூஜைகள் செய்து பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் இனிப்புகள் உண்டு மகிழ்வர். பெண் வீட்டாரோடு சேர்ந்து புது மாப்பிள்ளையும் பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவர். இதுநாள் வரை தனது சொந்த வீட்டில் தீபாவளி கொண்டாடிய ஆண்மகன், புதிய அனுபவமாக தனது மனைவி வீட்டில் தலைதீபாவளி கொண்டாடுவார்.
பெண் எடுத்த வீட்டின் மணமகனும் ஒரு அங்கம் தான் என்பதை கூறும் வகையிலும், பெண்ணை தங்கள் வீட்டிற்கு அனுப்பியதால் தீபாவளி அன்று தனது மகனை உங்களது மகனாக ஏற்று கொள்ளும்படி மாப்பிள்ளையின் பெற்றோர்கள் அவரை பெண் வீட்டுக்கு அனுப்பி வைத்து ஒருவருக்கொருவர் உறவு பாராட்டி கொள்வதும் தலை தீபாவளியின் வழக்கம் என்று சொல்லப்படுகிறது.
இதனிடையே, அதிகாலை 4 மணிக்கே எழுவது பாரம்பரிய உணவுகளை வீட்டிலேயே சமைப்பது போன்ற பல வழக்கங்கள் தற்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு வரும் அனைத்து பண்டிகைகளும் மணமகனின் வீட்டில் கொண்டாடப்பட்டாலும் தலை தீபாவளி மட்டும் மணமகள் வீட்டிலே கொண்டாடப்படும் என்பதால் தலைதீபாவளி தனிச்சிறப்பு மிக்க பண்டிகையாகப் பார்க்கப்படுகிறது.