தக்காளி வெற்றிக் கழகமா ? தொடரும் பேருந்து பலகை சர்ச்சைகள்... என்ன செய்யப்போகிறது TNSTC !
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் MTC பேருந்தின் TN-01 AN 5522 என்ற வாகனத்தின் பின்புற டிஜிட்டல் பலகையில் வழித்தட விவரங்களுக்கு பதிலாக “தக்காளி வெற்றி கழகம்” எனும் வாசகம் காட்டப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மர்ம நபர்கள் பலகையை மாற்றியதாக MTC விளக்கம் அளித்து, பலகை திருத்தப்பட்டதுடன், இனி இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளை MTC என அழைக்கப்படும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. இந்த சூழலில் MTC-க்கு சொந்தமான TN-01 AN 5522 என்ற பேருந்தின் பின்புற டிஜிட்டல் பலகையில் பேருந்து நிறுத்தங்களின் பதிலாக, “தக்காளி வெற்றி கழகம்” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விளக்கமளித்துள்ளது. அதில், குறிப்பிட்ட பேருந்தின் வழித்தட விவர (Route Board) பலகை சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் மாற்றப்பட்டிருந்தது என்றும், இது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட பணிமனை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, வழித்தட விவர பலகை சரி செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் இது போல பல முறை அரசு பேருந்தின் டிஜிட்டல் பலகையில் இது போல வேறு வேறு பெயர்கள் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசு பேருந்தின் டிஜிட்டல் பலகையில் இந்தி வாசகம் இடம்பெற்றிருந்தது, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் பேருந்தின் பெயர் பலகையில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும், தவெக போன்ற பெயர்கள் இடம்பெற்றிருந்ததும் இதுபோல சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

