"தென் இந்திய காடுகளில் தீவிரவாத பயிற்சி" என்ஐஏ விசாரணையில் திடுக்கிடும் தகவல்
தென் இந்தியாவில் உள்ள காடுகளில் தீவிரவாத பயிற்சிகளை மேற்கொள்ள பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது, தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் தெரியவந்தது.
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தமிழகம் மற்றும் பெங்களுரைச் சேர்ந்த 10 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பச்சையப்பன், ராஜேஷ், அப்துல் ரஹ்மான், அன்பரசன் ஆகிய 4 பேர் மோசடியாக சிம்கார்டுகளை வாங்கியதோடு, தமிழக ஐஎஸ் ஒருங்கிணைப்பாளரான காஜா மைதீனுக்கு உதவியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், பெங்களூரில் கைது செய்யப்பட்ட ஹனிப் கான் மற்றும் இம்ரான் கான் ஆகியோர் தீவிரவாத அமைப்பை சேர்ந்த காஜா மைதீன் மற்றும் அவர்களது கூட்டாளி அப்துல் சமத், செய்யது அலி நிவாஸ் ஆகியோரை இந்தியாவின் எல்லைப் பகுதியில் இருக்கும் ஹிஜ்ரா என்ற பகுதிக்கு அழைத்துச் செல்ல உதவி இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஐஎஸ் ஒருங்கிணைப்பாளரான காஜாமைதீனுக்கு பெங்களூரில் கைது செய்யப்பட்ட இஜாஸ் பாட்சா மூலமாக கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கடத்தி, பெங்களூரைச் சேர்ந்த இம்ரான்கான் ஹனிப் கான், உசைன் செரீப் ஆகியோர் வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதும், தென் இந்தியாவில் உள்ள காடுகளில் தீவிரவாத அமைப்பை உருவாக்கி, தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததும் என்.ஐ.ஏ.விசாரணையில் தெரியவந்தது.
ஆறு நாள் காவல் துறை விசாரணைக்குப் பிறகு, பத்து பேரும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்துள்ளனர்.