சொந்த ஊரில் அகதியான மக்கள் : உருக்கமான பதிவு

சொந்த ஊரில் அகதியான மக்கள் : உருக்கமான பதிவு

சொந்த ஊரில் அகதியான மக்கள் : உருக்கமான பதிவு
Published on

தமிழகத்தை கடந்த ஒரு வாரமாக அச்சுறுத்தி வந்த கஜா பயுல் நேற்று கரையை கடந்தது. கஜா புயலால், நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. புயலால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினமும் ஒன்று. புயலின் தாக்கத்தினால் தொலைதொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வருபவர்கள் தங்கள் சொந்த ஊரில் நடந்தது என்ன? என்று சரிவர தெரியாமல் அவதிப்படுகின்றனர். இப்பகுதிக்கு ஊடகங்கள் இதுவரை செல்லாத நிலையில் புதிய தலைமுறை முதல்முறையாக இப்பகுதிக்கு சென்றுள்ளது. தங்களின் அவல நிலையை புதிய தலைமுறையிடம் வெளிப்படுத்திய மக்கள் அரசு விரைந்து உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் வெளியூரிலிருந்து தங்களின் ஊரில் இருக்கும் அவல நிலையை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் பலரின் பதிவுகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒன்று :

எங்கள் ஊரின் அடையாளம், அழகு அனைத்துமே தென்னை மரங்கள் தான். பல ஆண்டுகளுக்கு பிறகு கண்ணை கட்டி ஊருக்குள் போய் விட்டு வந்தாலும் கடல் காற்றுடன் கலந்து வரக்கூடிய தென்னை மரங்களின் தென்றல் காற்று, அதிராம்பட்டினத்தை காட்டிக்கொடுத்துவிடும். எங்கள் மூதாதையர்கள் பொத்தி பொத்தி வளர்த்த தென்னை மரங்கள் இன்று வேறோடு சாய்ந்து கிடப்பதை காண சகிக்கவில்லை. மனிதர்கள் மரித்துக்கிடந்தால் எந்த மாதிரியான உணர்வு ஏற்படுமோ அதே உணர்வு வேறோடு சாய்ந்துக்கிடக்கும் தென்னைகளை பார்த்தவுடன் வந்தது. தங்கள் சொந்த பிள்ளைகளை போல் தென்னைகளை வளர்த்துவந்த விவசாயிகளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. தங்கள் மூதாதயர்கள் பயிரிட்ட தென்னைகளை போற்றிப்பாதுகாத்து வந்த விவசாயிகளை நாம் எப்படி தேற்றுவது? அதனை மீட்க முடியுமா?

இனி ஊருக்கு சென்றால் எங்கள் ஊரின் அந்த பசுமையை பார்க்க முடியுமா..?
தென்னை மரங்களின் தென்றல் காற்றின் சுகத்தை அனுபவிக்க முடியுமா..?
கிரிக்கெட் மைதானங்களை சுற்று நிற்கும் தென்னை மரங்களின் நிழலில் அமர முடியுமா?
சாலைகளின் இரு ஓரங்களிலும் நின்று பசுமை போர்வை போல் காட்சி தரும் நிழல் மரங்களை தான் காண முடியுமா?

முடியும்... ஆம், மீண்டும் நாம் முழு முயற்சியெடுத்து தென்னைகளை பயிரிட வேண்டும். நமது முன்னோர்கள் நம்மிடம் விட்டுச்சென்ற தென்னை தோப்புகளை நாம் நமது வாரிசுகளுக்கு விட்டுச்செல்ல வேண்டும். புயல் பாதிப்புகள் குறைந்த பிறகு ஊரில், வெளியூர்களில் உள்ள ரியஸ் எஸ்டேட் பெருச்சாளிகள் விவசாயிகளிடம் மூளைச்சலவை செய்யத்தொடங்குவார்கள். ஒரு காலத்தில் முழுவதும் தென்னைக்காடாக இருந்த அதிராம்பட்டினம் பாதிக்கும் மேல் இன்று கான்கிரீட் காடாக மாறிவிட்டது. இன்னும் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் தென்னைக்காடுகளை அழித்து ப்ளாட் போட்டு, இப்போதே ரியஸ் எஸ்டேட் தரகர்கள் திட்டம் தீட்டி இருப்பார்கள்.

தென்னை மரங்களை இழந்த தோப்பு உரிமையாளர்களிடம் வந்து ஆறுதல் சொல்வது போல் பேசுவார்கள். தயவு செய்து அவர்களின் பேச்சை ஏற்க வேண்டாம். நமது பிள்ளைகளுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டால் பணம் செலவழித்து அவர்களை உடல் நிலை தேற வைப்பதை போல், நாம் உழைப்பையும், பணத்தையும் செலவழித்து நமது தென்னை விவசாயத்தை மீண்டெழ செய்தல் வேண்டும். இது எனது அன்பு வேண்டுகோள்.

-நூருல் இப்னு ஜஹபர் அலி  (முகநூல் பதிவிலிருந்து)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com