புதிய மாவட்டங்கள் ஆனது தென்காசி, செங்கல்பட்டு!
தென்காசி, செங்கல்பட்டு ஆகிய நகரங்கள் புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியை, தனி மாவட்டமாக பிரிக்கக் கோரி, நீண்ட நாட்களாக அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். தென்காசி தற்போது முதல் நிலை நகராட்சியாக உள்ளது. இதன் அருகில் குற்றாலம் இருப்ப தால் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
இதே போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டை தனி மாவட்டமாக அறிவிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து இதுபற்றிய அறிவிப்பை, விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையின் இன்று அறிவிப்பார் எனக் கூறப்பட்டது. அதன்படி தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டு உருவாக்கப்படும் என்று இன்று அறிவித்தார். இரண்டு மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி, தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது.