காவல்நிலையத்தில் வீசப்பட்டது மண்ணெண்ணெய் பாட்டில்தான்: முதலமைச்சர் விளக்கம்
சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வீசப்பட்டது எரிந்த நிலையில் உள்ள மண்ணெண்ணெய் பாட்டில்கள்தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், நேற்று சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும், யார் வீசினார்கள் என்பதை கண்டுபிடிக்க அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராக்கள் வேலை செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் நிலையத்திலேயே பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதாகவும், சி.சி.டி.வி. கேமிராக்களின் அவசியம் மற்றும் பராமரிப்பை இந்த சம்பவம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
இதே பிரச்னையில் பேசிய சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, சென்னை நகரில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், பல அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது, அதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வீசப்பட்டது எரிந்த நிலையில் உள்ள மண்ணெண்ணெய் பாட்டில்கள் தான் என்றும், இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு உடனடியாக காவல்நிலையத்தை சென்னை காவல் ஆணையர் பார்வையிட்டதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் 12 பேரிடத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதில் ஒரு நபரின் உருவம், சி.சி.டி.வி காட்சியுடன் ஒத்துப்போவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.