நெல்லை: கொரோனா வார்டில் வேலை; ஆனால் சம்பள பாக்கியுடன் திடீரென நீக்கப்பட்ட செவிலியர்கள்?

நெல்லை: கொரோனா வார்டில் வேலை; ஆனால் சம்பள பாக்கியுடன் திடீரென நீக்கப்பட்ட செவிலியர்கள்?
நெல்லை: கொரோனா வார்டில் வேலை; ஆனால் சம்பள பாக்கியுடன் திடீரென நீக்கப்பட்ட செவிலியர்கள்?
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட கூடங்குளம் அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்று காலத்தில் செவிலியராக பணியாற்றிய செவிலியர்கள் திடீரென எந்தவித முன்னறிவிப்புமின்றி பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது ஊதியமும் வழங்கப்படாத நிலை இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். 
“கொரோனா காலகட்டத்தில் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியர்களாக பணியாற்றிய எங்களுக்கு ஊதியம் தராமல் பணியிலிருந்து நீக்கியுள்ளனர். எங்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அவர்கள் முறையிட்டுள்ளனர். 

இதனால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ள செவிலியர்கள், பணியமர்த்தப்படும் போது எவ்வளவு காலம் என்ற முன்னறிவிப்பு எதுவும் தெரிவிக்கப்படாமல் இருந்ததாகவும், இதற்கு முன்னர் இருந்தவர்களுக்கு சுகாதாரத் துறை இணை இயக்குனர் சார்பில் ‘மூன்று மாத காலம்’ என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றனர்.

ஆனால் தாங்கள் பணியில் சேர்ந்தபோது இந்த மூன்று மாத காலம் என்ற கால கெடு பற்றி தங்களிடம் எதுவும் கூறவில்லை என்றும் தற்போது தாங்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். “வேறு மருத்துவமனைக்கு நாங்கள் வேலை தேடி சென்றால் நிர்வாகம் சார்பில் சம்பளம் பேரம் பேசுகின்றனர். மேலும் வேலை வாய்ப்பு வழங்குவதிலும் காலதாமதம் செய்கின்றனர்.

வெளிநாட்டில் பணிபுரிய நினைத்தால் ஒவ்வொரு நாடும் தனக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட வெவ்வேறு தேர்வுகளை வைத்துள்ளது. அவற்றை எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட எங்களை போன்ற செவிலியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும். கொரானா காலகட்டத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய எங்கள் நிலையை கருத்தில் கொண்டு, இந்த தற்காலிக வேலையை நாங்கள் மேலும் தொடர வாய்ப்பு வழங்க வேண்டும்” என ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com