கருணாநிதி நினைவிடத்தில் கோபுரச் சின்னம் விவகாரம்: அமைச்சர் சேகர்பாபுவுக்கு எழும் கண்டனங்கள்!
இந்த விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபு மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்ததையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில், அமைச்சர் சேகர்பாபு மரியாதை செலுத்தினார்.
அப்போது கருணாநிதியின் நினைவிடம் மீது இந்து கோயிலின் கோபுரச் சின்னம் பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபுவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக மாநில தலைவர் நாகேந்திரன், இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்த கருணாநிதி நினைவிடம் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோவில்களின் புனிதத்தை கெடுக்க வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதே போன்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டன பதிவில், கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.
நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவது இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபுவிற்கு அதிமுக தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், திமுக அரசு, இந்து மத மக்களின் உணர்வுகளை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருவதாகவும், இந்துக்களை கொச்சைப்படுத்துவதில் அப்படி என்ன சந்தோஷம் உங்களுக்கு எனவும் அதிமுக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதே போன்று, அமைச்சர் சேகர்பாபுவின் செயலுக்கு பலரும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர்.