எஸ்.பியான தனது மகளுக்கு சல்யூட் அடித்த துணை ஆணையர்!
மாவட்ட எஸ்.பியான மகளுக்கு துணை ஆணையராக பணியாற்றும் தந்தை சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவம் தெலுங்கானாவில் நடைபெற்றுள்ளது.
தெலுங்கானாவின் காவல்துறையில் துணை ஆணையராக பணியாற்றி வருபவர் உமா மகேஷ்வர ஷர்மா. இவர் அடுத்த ஆண்டுடன் ஓய்வு பெறுகிறார். இவரது சிந்து ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தெலுங்கானாவின் காவல்துறையில் எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். பணியின் அடிப்படையில் பார்த்தால் சிந்து அவரது தந்தையை விட உயர் அதிகாரி ஆவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று தெலுங்கானாவில் நடைபெற்றக் கட்சிக் கூட்டம் ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சிந்துவின் வருகையைக் கண்ட ஷர்மா, பணியின் அடிப்படையில் அவருக்கு சல்யூட் அடித்தார்.
இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தனது மகளுக்கு சல்யூட் அடித்தது தொடர்பாக கூறியுள்ள ஷர்மா, தனக்கு இது பெருமையான விஷயம் என தெரிவித்துள்ளார். வீட்டில் தான் அப்பா-மகள் உறவு எல்லாம் என்றும், பணியின்போது மகள் தனது உயர் அதிகாரி என்றும் அவர் பெருமிதம் அடைந்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள சிந்துவும், தனக்கு இது பெருமையான நிகழ்வே எனக் கூறியுள்ளார்.