சொகுசு வசதிகளுடன் தேஜாஸ் ரயில் பெட்டிகள்.. தென்னக ரயில்வேயிடம் ஒப்படைப்பு
முதல் தர விமான இருக்கைகள், ஜிபிஎஸ், பாடல்கள் கேட்க வசதியான எல்இடி டிவி, தானியங்கி கதவு போன்ற வசதிகள் கொண்ட தேஜாஸ் ரயில் பெட்டிகள் தென்னக ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்தியாவின் முதல் அதிவிரைவு ரயிலான ‘ரயில்-18’ தொடர்வண்டியை தயாரித்த பின் ஐசிஎப், பயணிகளிக்கான அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட தேஜஸ் ரயிலுக்கான பெட்டிகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. இந்த ரயில் பெட்டிகளில் எப்ஆர்பி தகடுகளால் ஆன அழகிய உட்புற தோற்றம், சொகுசாக அமர்ந்து பயணம் செய்யும் வசதியான இருக்கைகள், ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் சிறிய வீடியோ திரைகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன.
இதுதவிர ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல் அறியும் வசதி, எல்ஈடி விளக்குகள், ரயில்பெட்டியின் உள்புறமும் வெளிப்புறமும் தானியங்கி கதவுகள், பயணிகள் இருக்கைகளின் கைப்பிடியில் உள்புறம் மடக்கி அமைக்கப்பட்டுள்ள வெளியே தெரியாத சிற்றுண்டி மேசைகள், இருக்கைகளின் பின்புறம் செல்பேசி சார்ஜிங் செய்யும் வசதி போன்ற வசதிகளும் உருவாக்கபட்டுள்ளன.
இத்தகைய சிறப்பம்சங்களுடன் தயாரிக்கபட்ட 23 தேஜாஸ் ரயில் பெட்டிகளும் தென்னக ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐ.சி.எஃப் பொது மேலாளர் மணி, சென்னை எழும்பூர் முதல் மதுரை வரை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்த பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் உயர்வகுப்பு பெட்டிகளில் 56 பயணிகளும், இதர குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் 78 பயணிகளும் பயணிக்கலாம் எனவும் தெரிவித்தார்.