காவல்நிலையம் முன்பு டிக்டாக்; பின்னர் அதே இடத்தில் வைத்து மன்னிப்பு - மதுரை சம்பவம்!!
மதுரை காவல் நிலையம் முன்பு டிக் டாக் செய்த இளைஞர்கள் தங்களது தவறினை உணர்ந்து காவல்நிலையம் முன்பாகவே மன்னிப்பு கேட்டனர்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சில இளைஞர்கள் கிடா சண்டை நடத்தியுள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் அனுமதியின்றி கிடா சண்டை நடத்தப்பட்டதை அடுத்து நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. பிறகு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த இளைஞர்கள் காவல் நிலைய வாசலில் நின்றுகொண்டு
தங்களின் கிடாவுடன் ஒரு டிக் டாக்கையும் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். ஜெயிலுங்க கட்டியதே தங்களுக்காகத்தான் என்பதுபோன்ற வசனங்கள் அந்த டிக்டாக் வீடியோவில் இடம்பெற்றிருந்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டது.
அந்த வீடியோ போலீசாரிடம் சிக்க, மீண்டும் அவர்களைப் பிடித்த போலீசார் கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பினர். பின்னர் தங்களது தவறினை உணர்ந்த அந்த டிக் டாக் இளைஞர்கள் காவல் நிலையம் முன்பாக இனி இந்த ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற தவறுகள் செய்ய மாட்டோம் என்று மன்னிப்பு கேட்டனர்.