திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் சடலமாக மீட்பு: கணவனை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல்
திருமணமாகி 5 மாதமான இளம்பெண், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, கணவரை கைது செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்துள்ள புளியாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (25). ஓட்டுனராக பணிபுரியும் இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இதே கிராமத்தை சேர்ந்த அனிதா (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 5 மாதமான நிலையில் கடந்த 05.08.2021 அன்று வீட்டை விட்டு வெளியேறிய அனிதா காணாமல் போனார். வாட்ஸ்-ஆப் மூலம் தகவல் கொடுத்து அனிதாவை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஓட்டப்பட்டி கிராமத்தில் வசிக்கும் செவத்தா கவுண்டர் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் அனிதா சடலமாக கிடப்பதாக அவ்வழியே சென்றவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போச்சம்பள்ளி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, கிணற்றில் சடலமாக கிடந்த அனிதாவின் உடலை மீட்டு மத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
திருமணமாகி 5 மாதமான நிலையில், அனிதா உயிரிழந்ததால் கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் சதீஸ்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அனிதாவின் கணவர் ஹரிஹரனை உடனடியாக கைது செய்யக்கோரி அனிதாவின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மத்தூர் காவல் நிலையம் முன்பு தரும்புரி - திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அலெக்ஸாண்டர் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.

