புதுச்சேரியில் இருதரப்பு இடையே மோதல்: கண்ணீர் புகைக்குண்டு வீச்சு
புதுச்சேரியில் கருத்துக்கேட்பு கூட்டத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர்.
புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்றை விரிவாக்கம் செய்வது தொடர்பாக இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும் இதில் பங்கேற்றிருந்தார். அப்போது ஆலையின் விரிவாக்கத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் எழுந்தன. கூட்டம் முடிந்து ஆட்சியர் கிளம்பியவுடன் இருதரப்பு இடையே கருத்து மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் அளவிற்கு மோதல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் கண்ணீர் புகைக்குண்டும் வீசப்பட்டது. இதனால் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.