சுகாதாரப் பணியாளர்களுக்கு அணி வகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை
நெல்லை மாநகர காவல்துறை சார்பில் மருத்துவ பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் அணி வகுப்பு மரியாதை நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 738 நபர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இதனால் கொரோனா தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதிலும் உள்ள மருத்துவ பணியாளர்கள், சுகாதார துறையினர், காவல் துறையினர் ஆகியோர் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். குறிப்பாக மருத்துவ ஊழியர்கள் தங்களது உயிரையும் துச்சமாக மதித்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவர்களை கெளரவிக்கும் வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டு மக்கள் அனைவரும் தெருக்களுக்கு வந்து கைத்தட்டினர். அந்த வகையில் நெல்லையிலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் பொது சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாநகர காவல்துறையினரின் சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த அணிவகுப்பு குறித்து நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் கூறும் போது, “கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்தச் சூழ்நிலையில் நெல்லையில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்களின் பணியானது மிகவும் போற்றத்தக்கது. அவர்களுக்கு பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்தவே இந்த அணிவகுப்பு காப்பு மரியாதையை மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கி இருக்கிறோம். இந்த அணி வகுப்பு நிச்சயம் அவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் இருக்கும் என நம்புகிறோம்” என்றார்.