வறுமையில் தவித்த மாணவர்களின் குடும்பங்கள் : அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவிய ஆசிரியர்கள்
புதுக்கோட்டை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஊரடங்கு உத்தரவால் உணவிற்கே வழியின்றி தவிக்கும் தங்கள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.
தொடர் ஊரடங்கு உத்தரவால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. அவர்களுக்கு தன்னார்வலர்களும் பல்வேறு அமைப்பினரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க முடிவு செய்தனர்.
அதன்படி தங்கள் பள்ளியில் படிக்கும் ஆதனக்கோட்டை, வண்ணாரபட்டி, குப்பையின்பட்டி, கருப்புடையாபட்டி, சோத்துப்பாளை ஆகிய கிராமங்களில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
சுமார் 150 மாணவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து வழங்கியது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.