போலீஸ் காவலிலும் மாணவர்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர்
போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி போலீஸ் காவலில் இருந்த ஆசிரியர் ஒருவர் பள்ளி வகுப்பின் மாணவ தலைவர்களை வரவழைத்து சக மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஆலோசனைகளை வழங்கிய நிகழ்வு காண்போருக்கு நெகிழ்வை ஏற்படுத்தியது.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பணி புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாக பணிகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் 3,620 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆசியர்களின் இந்த போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கபடுவதாக பெற்றோர்களும், கல்வியாளர்களும் ஆசிரியர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கந்தர்வக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை போலீஸார் கைது செய்து அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர்.
அதில் கைதாகி போலீஸ் காவலில் இருந்த கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆங்கில ஆசிரியர் தெய்வீகன். அவர் தங்கள் போராட்டத்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை உணர்ந்து 10 மற்றும் 9ம் வகுப்பு மாணவ தலைவர்களை அங்கு வரவழைத்தார். அவர்களிடம் இன்று மாணவர்களுக்கு நடத்த வேண்டிய பாடம் குறித்து விளக்கம் அளித்து அதனை வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு பாடமாக நடத்த அறிவுறுத்தினார்.
இதே போல் மற்ற வகுப்பு தலைவர்களையும் மண்டபத்திற்கு வரவழைத்த அவர் சக மாணவர்களுக்களுக்கான எழுத்துப் பயிற்சி மற்றும் இன்றைய பாடங்களை படிக்க அறிவுறுத்தி அனுப்பினார். போராட்டத்தில் ஈடுபட்டு சிறைபிடிக்கப்பட்டிருந்த நிலையிலும்கூட மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர் கல்வி பணியாற்றியது காண்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.