கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஆசிரியை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ஆசிரியை ரம்யா நேற்று முன்தினம் வழக்கம்போல பள்ளிக்கு சென்றார். அப்போது பள்ளி வளாகத்திற்குள் திடீரென நுழைந்த ஒருவர் ரம்யாவை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் ரம்யா சரிய, அங்கிருந்து அந்த நபர் தப்பியோடிவிட்டார். இதைக்கண்டு பள்ளியில் இருந்த சக ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற காவல்துறையினர் ரம்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு தலைக் காதலால் ரம்யா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. விருதைக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்ற இளைஞர் ரம்யாவை ஒரு தலையாக காதலித்ததாகவும், அவரது பெற்றோரிடம் சென்று பெண் கேட்டதாகவும் தகவல் வெளியானது. ராஜசேகருக்கு ரம்யாவை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னரும் தொடர்ந்து ரம்யாவை தொந்தரவு செய்த ராஜசேகர், அவர் கிடைக்காத விரக்தியில் அவரை கொலை செய்ததாக சொல்லப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருநாவலூர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் ராஜசேகரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.