”கொரோனா இன்னும் குறையவில்லையே”-ஆசிரியர் பட்டய பயிற்சி பொது தேர்வை புறக்கணித்த தேர்வாளர்கள்

”கொரோனா இன்னும் குறையவில்லையே”-ஆசிரியர் பட்டய பயிற்சி பொது தேர்வை புறக்கணித்த தேர்வாளர்கள்
”கொரோனா இன்னும் குறையவில்லையே”-ஆசிரியர் பட்டய பயிற்சி பொது தேர்வை புறக்கணித்த தேர்வாளர்கள்

“ஆசிரியர் பட்டய பயிற்சி பொது தேர்வு அவசரமாக நடைபெறுகிறது. இதை தள்ளிவைக்க வேண்டும்” என அதற்கு தயாராகிவரும் மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இந்தத் தேர்வினை தள்ளி வைக்க வேண்டி, இன்று நடந்த தேர்வை அவர்கள் புறக்கணிக்கவும் செய்தார்கள்.

செப்டம்பர் 2ம் தேதி (இன்று) ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சி தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வு குறித்து தேர்வெழுத இருந்த ஆசிரியர் பயிற்சி மாணவர்களிடம் எவ்வித கருத்தும் கேட்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் அவசர அவசரமாக தேர்வு கட்டணம் செலுத்த செய்து மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே தேர்வு நடைபெறும் தேதியும் நிர்ணயிக்கப்பட்டதாகவும் பயிற்சி மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருப்பதாகவும் கூறி, ‘தேர்வு எழுத நாங்கள் மனதளவில் இன்னும் தயாராகாவில்லை. பொதுத் தேர்வுக்கு தயாராக இன்னும் காலஅவகாசம் வேண்டும்’ என்கிறார்கள் அவர்கள். அவர்கள் கோரிக்கை ஒருபுறம் இருந்தாலும், தேர்வு காலம் ஒத்திவைக்கப்படாமல் இருந்தது. அந்தவகையில் திட்டமிட்டபடி இன்று தேர்வு தமிழ்நாட்டில் நடந்தது. இதில் காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் பள்ளி மையத்தில் நடைபெற்ற ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு வளாகத்தில், தேர்வுக்கு சென்ற மாணவர்கள், தேர்வை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இதுபற்றி அவர்கள் தெரிவிக்கையில், “தேர்வுக்கு வரும் மாணவர்களில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டோர் இன்னும் கொரோனா தடுப்பூசி போடவில்லை. கொரோனா பரவல் இன்னும் முழுமையாக குறையாத சூழலில், தடுப்பூசி போடாதவர்களுடன் தேர்வெழுத வேண்டும் என்ற நிலையால், நாங்கள் உயிர் பயத்தில் இருக்கிறோம். எங்களில் பெரும்பாலானோருக்கு 75% வகுப்புகள் ஆன்லைன் மூலம் தான் நடைபெற்றது.

இதனால் பொது தேர்வும் ஆன்லைன் மூலமாக தான் நடைபெறும் என நம்பி இருந்தோம். ஆனால், நேரடி தேர்வு வைத்துவிட்டனர். இது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பொது தேர்வை எழுத இருக்கும் எங்களுக்கு இதற்கு முன்னர் எவ்வித பருவத்தேர்வும் எழுதாத சூழலும் ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது நேரடியாக பொதுத்தேர்வு எழுத சொல்வது எங்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

அவசர அவசரமாக தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்பட்டதால் எங்களால் முழுமையான தேர்வுக்கு தயாராக முடியவில்லை. கடந்த வருடமும் அவசர அவசரமாக தேர்வு நடத்தி அனைத்து மாணவர்களையும் தோல்வியடைய செய்து விட்டார்கள். இம்முறையும் அவசரமாக தேர்வு நடத்தியுள்ளனர்” என்றனர்.

இன்று நடைபெற இருந்த தேர்வை முழுவதுமாக புறக்கணித்து தேர்வுக்கு தயாராக கால அவகாசம் வழங்குமாறு கோரிய அவர்கள், தேர்வினை அக்டோபர் மாதம் நடத்த வேண்டி மாணவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

- பிரசன்னா 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com