டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்

டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்
டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் கோரிக்கை அட்டை அணிந்து வேலை செய்யப்போவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன. அதாவது,

01. தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா நோய் பெருந்தொற்று குறித்த முழு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

02. கொரோனா நோய் பெருந்தொற்று தாக்குதலால் பாதிக்கப்படும் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளை டாஸ்மாக் நிர்வாகம் முழுமையாக ஏற்க வேண்டும். டாஸ்மாக் நிறுவன உயர் அலுவலர்களுக்கும், அமைச்சர்களும் வழங்கப்படும் உயர் சிகிச்சை போன்றே டாஸ்மாக் பணியாளர்களுக்கும் தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்.

03. கொரோனா நோய் பெருந்தொற்று தடுப்பு பணிகளில் முன் களப் பணியாளர்களுக்காக அறிவிக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் சேர்க்கப்பட வேண்டும்.

04. மதுக்கடைகள் இயங்கும் நேரம் காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை என மாற்றி அமைக்க வேண்டும்.

05. டாஸ்மாக் மதுக்கடைகளில் வழங்கிய முகக்கவசம், கையுறைகள் ஆகியவை காலமுறைபடி மாற்றி வழங்க வேண்டும். பணியாளர்கள் அனைவருக்கும் பிபிஇ என்கிற தனிநபர் நோய் தொற்று பாதுகாப்புக் கருவிகள் வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் வழங்க வேண்டும்.

06. கொரோனா நோய் பெருந்தொற்று தாக்குதலால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்கள் மதுரை ஜி.வேல்முருகன், மேற்பார்வையாளர் எம்.ராஜசேகர் ஆகியோரின் குடும்பங்களுக்கு மருத்துவ பணியாளர்களுக்கு அறிவித்த காப்பீட்டு திட்டத்தில் சேர்த்து ரூபாய் 50 லட்சம் இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும். கொரோனா நோய் தொற்று சிகிச்சை பெற்று வரும் பணியாளர் ராஜாவுக்கு இதுவரை ரூபாய் 6 லட்சம் செலவாகியுள்ளது. தொடர்ந்து செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அவருடைய மருத்துவ செலவுகள் அனைத்தும், முழுமையாக வழங்க வேண்டும்.

07. தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா நோய் தொற்று பரவல் காலத்தில் மிகுந்த சிரமப்பட்டு பணிபுரியும் ‌அனைவருக்கும் ஊதியத்துடன் மாதம் ரூபாய் 10,000 வீதம் கூடுதலாக சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்.

08. டாஸ்மாக் மதுக்கடைகளில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இதில் விருப்பு வெறுப்பு காட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். சட்ட விரோத ஆய்வுகள் தடுக்கப்பட வேண்டும். கொரோனா நோய் தொற்று காலத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதலை மீறி மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும் ஆய்வுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

09. நாடு முடக்கம் மற்றும் ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளில் சட்டவிதிமுறைகளுக்கு மாறாக நடந்துள்ள தவறுகள், குற்றச் செயல்கள் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். விசாரணை அடிப்படையில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு,சட்டபடி உரிய வாய்ப்புகள் வழங்கி இறுதி உத்தரவு சட்டபடி வழங்க வேண்டும். மேலும்,இதில் பணியாளர்கள் அனைவரும் தவறானவர்கள் என்ற முறையில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான அபராதம் மற்றும் வட்டி, ஜிஎஸ்டி வரி வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யப்பட வேண்டும்.

10. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் கல்விதகுதிக்கு ஏற்ப அரசின் நிரந்தர பணி வழங்க வேண்டும்.இதுகுறித்த அனைத்து சங்க கூட்டத்தில், ஜூலை 28 முதல் 7,நாட்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்வது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com