டாஸ்மாக் அடைப்பு : காஞ்சிபுரத்தில் கள்ளச்சாராயம் அமோக விற்பனை
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லைகளில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெறுவது புதிய தலைமுறை கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. உத்திரமேரூர் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாகறல், கருவேப்பம்பூண்டி, பெருநகர், களியாம்பூண்டி உள்ளிட்ட கிராம மக்களில் சிலர் தங்களது வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகிறார்கள்.
கள்ளச்சாராயம் மற்றும் பட்டை சாராயம் விற்கப்படுகிறது. இதற்கு காவல்துறையினர் சிலரும் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்ட எல்லைப் பகுதிகளான சுருட்டல், வெம்பாக்கம் ஒன்றியம் போன்ற பகுதிகளில் பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்ட சாராயம், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் தற்போது குடிநீர் கேன்களில் சாதாரணமாக விற்கப்படுகின்றன.
மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸாரின் நடவடிக்கை குறைவால் கள்ளச் சாராயம் அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். உத்திரமேரூர் பகுதி மதுராந்தகம் காவல் கோட்டத்திற்கு உட்பட்டு வருவதனால், மாவட்ட எல்லை பிரச்சினையை மையமாக வைத்து காவலர்கள் யாரும் இதை கண்டுகொள்வதில்லை எனவும் கூறப்படுகிறது.