தரமற்ற மதுபானங்களை விற்கத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோயம்பேடு டாஸ்மாக் கடையில் வாங்கிய இரண்டு வகையான மதுபானங்களை அருந்தியதால் வயிற்றுவலி, வாந்தி, பேதி ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். அந்த மது வகைகளை தஞ்சை ஆய்வகத்தில் ஆய்வு செய்ததில் அவற்றில் அனுமதிக்கப்பட்டதை விட இருமடங்கு டார்டாரிக் அமிலம் இருப்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் மதுபானம் இருக்கிறதா? என்பது குறித்து தெளிவாக தெரியாததால் அவற்றை சோதனை செய்ய முடியாத நிலை இருப்பதாக அதிகாரிகளும் கூறியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகையால் மதுபானங்களை சோதனை செய்ய வேண்டும் எனவும், தரமற்ற மதுபானங்களை விற்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.