
அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சங்கர நாராயணன் என்ற இளைஞருக்கு, அதேநாட்டைச் சேர்ந்த அன்னி டிக்சன் என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது. இருவரும் தங்களது காதல் விவகாரத்தை பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்களும் சங்க ரநாராயணன், அன்னி டிக்சன் திருமணத்திற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சங்கர நாராயணன், அன்னி டிக்சன் ஆகியோரது திருமணம் தஞ்சாவூரில் தமிழ் முறைப்படி எளிமையாக நடைபெற்றது. திருக்குறளை வாசித்து அமெரிக்க பெண் அன்னி டிக்சனுடன் சங்கர நாராயணன் மண ஒப்பந்தம் செய்து கொண்டார். திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டார், உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வாதம் செய்தனர்.
இந்த திருமணத்தில் பங்கேற்ற அன்னி டிக்சனின் குடும்பத்தினர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்திருந்தது பலரையும் வெகுவாக கவர்ந்தது.