தஞ்சாவூர் | அரசு மருத்துவமனையில் வலம் வரும் தெரு நாய்கள் - பொதுமக்கள் அச்சம்
செய்தியாளர்: ந.காதர்உசேன்
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்கும் மேலாக ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துமனையில்; மகப்பேறு சிகிச்சை, தாய் - சேய் நல பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, நாய்கடி சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு மகப்பேறு சிகிச்சை பிரிவு சிறப்பாக செயல்படுவதால், தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அதே போல் ஏராளமான உள்நோயாகளிகளும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தெரு நாய்கள் ஆங்காங்கே உலா வருகிறது. சில நேரங்களில் பொதுமக்கள் நாய்களை விரட்டினால், அவை கடிக்க வருகிறது. இதனால் பொதுமக்கள் நாய்களை பார்த்து அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.