தஞ்சை: பெரியார் சிலைக்கு காவி சால்வை மற்றும் குல்லா அணிவித்த மர்ம நபர்கள்
ஒரத்தநாட்டில் உள்ள பெரியார் சிலைக்கு மர்மநபர் காவி சால்வை போர்த்தி தலையில் குல்லா வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பாரதிதாசன் மகளிர் உறுப்பு கல்லூரி எதிரே பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள முழுஉருவ பெரியார் சிலைக்கு, காவி நிறத்தில் பொம்மை படம் போட்ட சால்வை அணிவித்து தலையில் மங்கி குல்லா வைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை அந்த வழியே நடைபயிற்சிக்கு வந்தவர்கள் இதனைக்கண்டு உடனடியாக அப்புறப்படுத்தி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இதுதொடர்பாக அந்த பகுதியில் சுற்றி திரிந்து கொண்டும் பெரியார் சிலைக்கு கீழே நின்று கொண்டும் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இது அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் செயலாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை திராவிடர் கழகத்தினர் புகார் எதுவும் கொடுக்கவில்லை.