தஞ்சை: மனைவி உயிரிழப்புக்கு வயிற்றில் ஊசியை வைத்து தைத்ததே காரணம்: கணவர் புகார்
தஞ்சை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட மனைவியின் வயிற்றில் ஊசியை வைத்து தைத்துவிட்டதால் தனது மனைவி இறந்துவிட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் கணவர் புகார் அளித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்துள்ள இளங்கார்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஜயகுமார் என்பவர் தனது பட்டதாரி மனைவி லட்சுமியை இரண்டாவது பிரசவத்திற்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி சேர்த்துள்ளார். இந்நிலையில், அறுவை சிகிச்சை மூலம் லட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது
இதையடுத்து டிஸ்சார்ஜ் செய்து லட்சுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பிறகும் லட்சுமிக்கு தொடர்ந்து வயிற்றில் வலி இருந்துள்ளது. இந்நிலையில், அறுவை சிகிச்சை செய்த மருத்துவரும். செவிலியரும் லட்சுமியின் வீடு தேடி சென்று லட்சுக்கு இன்னும் சில தினங்கள் சிசிச்சை அளித்திட வேண்டும் என்று கூறி மீண்டும் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் லட்சுமிக்கு வயிற்றுவலி அதிகமானதையடுத்து கடந்த மாதம் 22 ஆம் தேதி இறந்துவிட்டார் இதையடுத்து இறந்துபோன லட்சுமியின் ஸ்கேன் ரிப்போர்ட்டில் வயிற்றில் ஊசி (சிரஞ்ச்) இருப்பது தெரியவந்தது. இன்று உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த லட்சுமின் கணவர் விஜயகுமார், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் தனது மனைவியின் வயிற்றில் ஊசியை வைத்து தைத்துவிட்டதாகவும், அதனால்தான் தனது மனைவி இறந்துவிட்டதாகவும் புகார் அளித்தார்.
தனது மனைவியின் இறப்புக்கு காரணமான மருத்தவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும், குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும் வலியுறுத்தினர்.