பருவம் தவறிய மழை.. பாதிப்படையும் விவசாயிகள்..!
பருவம் தவறி பெய்துவரும் மழையினால் திருவாரூர் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
பருவமழை பொய்த்ததால் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 80 சதவிகித சம்பா பயிர்கள் கருகியிருந்தன. இதனிடையே ஆழ்துளை கிணறு மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரடப்பட்டிருந்த நெற் பயிர்களை இன்னும் ஒருவாரத்தில் அறுவடை செய்ய விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கடந்த ஒரு வார காலமாக பெய்த மழையினால் அந்த பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
விளைநிலங்களில் தேங்கியிருக்கும் மழை நீரினால் பயிர்கள் அழுகி வருவதாகவும், நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மழைநீர் வடிய வாய்ப்பில்லாததாலேயே இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். ஆகையால் அரசு உரிய முறையில் கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.