"யார் என்று கேட்பதற்கு நீங்கள் யார்?; தமிழர் என்றால் கசக்கிறதா?"-முதல்வர் ஸ்டாலின் பேச்சு
வீரமங்கை வேலுநாச்சியார், மானங்காத்த மருது சகோதரர்கள், மகாகவி பாரதியார் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி இவர்களை யார் என்று கேட்பதற்கு நீங்கள் யார்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற காணொலி பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ''திமுக ஆட்சிக் காலம் அன்னைத்தமிழ் ஆட்சி காலமாக இருக்க வேண்டும்.
தமிழ் தமிழ் என்று பேசுவது குறுகிய மனப்பான்மை என்ற அர்த்தம் இல்லை. நாங்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல ஹிந்தி ஆதிக்கத்திற்கு எதிரானவர்கள். இந்தியை திணிக்க நினைப்பவர்கள் ஆதிக்கத்தின் குறியீடாக திணிக்க நினைக்கிறார்கள். எந்த ஒரு மொழியையும் கற்றுக் கொள்வது அவர்களது விருப்பத்தை சார்ந்ததாக இருக்க வேண்டும். அவர்களது வெறுப்பை சார்ந்ததாக இருக்கக் கூடாது.
ஒரே ஒரு மதம் தான் இருக்க வேண்டும் என்பதைப் போல, ஒரே ஒரு மொழியாகத்தான் இருக்க வேண்டும் அதுவும் இந்தி தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்தியை தவிர்த்து மற்ற மொழி பேசுபவர்களை இரண்டாம் தர மக்களாக நினைக்கிறார்கள். தமிழ் என்றால் தமிழர்கள் என்றால் ஏனோ கசக்கிறது.
நாளை நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் திட்டமிட்டு தமிழகத்தின் அணிவகுப்பு அலங்கார வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. அவர்கள் தரும் காரணம் ஏற்றுக்கொள்ளமுடியாது. வீரமங்கை வேலுநாச்சியார் மானங்காத்த மருது சகோதரர்கள் மகாகவி பாரதியார் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி இவர்களை யார் என்று கேட்பதற்கு நீங்கள் யார்? பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக முதல் முதலாக குரல் எழுப்பியது தமிழ்நாடு.
பிரிட்டிஷார் எழுதிய வரலாற்றினை எடுத்து படியுங்கள். வ.உ.சியின் பேச்சை கேட்டால் பிணம் கூட எழுந்துநிற்கும் என அங்கிலேயரே எழுதி உள்ளனர். அவருக்கு இரட்டை ஆயுள் கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதியால் எழுதிவைக்க பட்டுள்ளது. ஆனால் இன்று வ.உ.சியை கப்பல் முதலாளி தானே என்று கேட்கிறார்கள். இவர்களை யார் என கேட்க நீங்கள் யார்?'' என கேள்வி எழுப்பினார்.