கடத்தல்காரர்களால் தன் 9 வயதில் டென்மார்க் நாட்டில் உள்ள ஒருவருக்கு விற்கப்பட்ட தமிழர் மாடப்பன் தன் உறவுகளை தேடி அலைந்து
கொண்டிருக்கிறார். 37 ஆண்டுகள் ஆன பின்பும் கூட, தன் ரத்த சொந்தங்களை என்றாவது ஒரு நாள் சந்திப்பேன் என நம்பிக்கையுடன் அவர்
காத்திருக்கிறார்.
மதுரையில் 1979-ஆம் ஆண்டு வீட்டைவிட்டு வெளியேறி வழிதெரியாமல் நின்று கொண்டிருந்த 9 வயது சிறுவன் மாடப்பனை மயக்க மருந்து கொடுத்து கோவைக்கு கடத்தி சென்ற ஒருவர், டெல்லியை சேர்ந்த மகேந்திர சிங் என்பவரிடம் விற்பனை செய்துள்ளார். மாடப்பனை காப்பகம் ஒன்றில் தங்க வைத்த மகேந்திர சிங், இரண்டு ஆண்டுகள் கடும் சித்திரவதை செய்து ஆங்கிலம், ஹிந்தி கற்றுக்கொடுத்து டென்மார்க்கை சேர்ந்த டாமி நெல்சன், லிஸ்பத் தம்பதிக்கு விற்பனை செய்துள்ளார்.
இருப்பினும் தனது ரத்த சொந்தத்தை எப்படியும் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் மாடப்பன் தனது பெற்றோர், குடும்பம் குறித்த விவரங்களை அறிய 11 முறை டென்மார்க்கில் இருந்து தமிழகம் வந்துள்ளார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இருப்பினும் குடும்பத்தை கண்டுபிடித்தே தீருவது என்ற மன உறுதி கொண்டன் மாடப்பன், கடந்த மே 11-ஆம் தேதி மீண்டும் தமிழகம் வந்துள்ளார். முன்னதாக தனது குடும்பத்தை கண்டுபிடிக்க உதவுவதாக வாக்குறுதி அளித்த, மதுரையில் தொண்டு நிறுவனம் நடத்திவரும் பெண்ணை கடந்த 2009-ஆம் ஆண்டு மாடப்பன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும் உள்ளார். இதனிடையே குடும்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று தினம் அழுது புலம்பும் மாடப்பனின் ஏக்கத்தை பலரும் பணம் பறிக்க பயன்படுத்தி கொள்வதாக அவரது மனைவி வருத்தம் தெரிவித்துள்ளார்.
வெகு நாட்களாக குடும்பத்தினரை தேடி வந்தாலும் தற்போது பத்திரிகைகள், ஊடகம் தேடலுக்கு உதவும் என்ற நோக்கில் நம்பிக்கை குறையாமல் காத்திருக்கிறார் மாடப்பன். தனது சகோதரருடன் ஆற்றங்கரை, மலை அடிவாரங்களில் விளையாடிய லேசான பழைய நினைவுகளின் துணையோடு காவேரி ஆற்றங்கரைப்பகுதி, மலைப்பகுதிகளில் தொடர்ந்து மாடப்பன் தேடி வருகிறார்.