சூர்யாவுக்கு ஆதரவாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சூர்யாவுக்கு ஆதரவாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சூர்யாவுக்கு ஆதரவாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஜெய்பீம் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து பாம்புகள், எலிகளோடு பழங்குடி மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சூர்யாவுக்கு எதிராக அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் பாம்பை கொண்டு எறிவோம் எனவும் அவர்கள் நம்மிடையே பேட்டியளித்தனர்.

இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெய் பீம். ஓடிடி தளத்தில் கடந்த 2ம்தேதி வெளியான இப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுதலையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தின் அடையாளத்தை காலண்டரில் பயன்படுத்தியதாக கூறி சர்ச்சை எழுந்த நிலையில், பாமக-வினர் மற்றும் வன்னியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் ஜெய்பீம் திரைப்படத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நேற்றைய தினம் திரைப்படத்தின் பொருட்டு இயக்குநர் ஞானவேல் அவர்களுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பு சார்பில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியினர் ஜெய்பீம் படத்திற்கு ஆதரவு தெரிவித்து கூடினர். திரைப்படத்தில் பழங்குடி மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை, துயரங்களை சிறப்பாக காட்சிப்படுத்தி நடித்ததாகக் கூறி நடிகர் சூர்யாவுக்கும், திரைப்படத்திற்கும் ஆதரவளிப்பதாக தெரிவித்தார்கள் அவர்கள். மேலும் தமிழகம் முழுவதும் பழங்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்னுக்கு நன்றி தெரிவித்தும், பழங்குடி மக்களுக்காக வாதாடி வெற்றி பெற்ற நீதியரசர் சந்துரு ஆகியோருக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்தனர். அவற்றை தொடர்ந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் அம்மக்கள்.

ஆர்ப்பாட்டத்தில் சாரைப்பாம்பு, நல்லபாம்பு, எலிகள், பூம் பூம் மாடு உள்ளிட்டவற்றை கொண்டு வந்து “நடிகர் சூர்யா வாழ்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க” என முழக்கங்களை எழுப்பினர். மேலும் நடிகர் சூர்யா, நீதிபதி சந்துரு, முதல்வர் ஸ்டாலின், பழங்குடியின போரளி பிர்சா முண்டா, அம்பேத்கர், காமராஜர் புகைப்படக்ககளை கையில் ஏந்தியும், வாழ்த்து பதாகைகளை ஏந்தியும் பழங்குடி மக்கள் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜெய்பீம் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து பழங்குடி மக்கள் பாம்புகளோடு, எலிகளோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம் குறித்து தமிழக பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பை சேர்ந்தவருமான மகேஸ்வரி நம்மிடையே பேசுகையில், “ஜெய்பீம் படத்தில், எங்களுடைய சமுதாயம் சந்திக்கும் இன்னல்களை சூர்யா அப்படியே காட்டியுள்ளார். தற்பொழுது சூர்யா எதிராக பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சூர்யாவுக்கு எதிராக அசம்பாவிதங்கள் நடக்கும் பட்சத்தில், அவர்கள் மீது பாம்பை கொண்டு எறிவோம்” என்று ஆவேசமாக கூறினார்.

அவற்றை தொடர்ந்து, “எங்கள் தமிழக பழங்குடி மற்றும் நாடோடி மக்கள் தமிழக அரசுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள். எந்த சூழ்நிலையிலும், எங்கள் பழங்குடி நாடோடி இன மக்கள் நடிகர் சூர்யாவுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம். எங்களது தமிழக பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பு சார்பாக, எங்களது நிபந்தனையற்ற தார்மீக ஆதரவை அரசுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டு மனுவொன்றை ஆட்சியரை சந்தித்து கொடுத்தனர்.

- மணிகண்டபிரபு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com