தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் நிலையில், வெளியில் நடமாடுவதற்கு மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். வெப்பநிலை உயர்வு என்பதை தாண்டி காற்றின் ஒப்பு ஈரப்பதம் வெயிலின் தாக்கத்தை நாம் அதிகமாக உணர்வதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. வெப்பநிலை உயர்வைத் தாண்டி, புழுக்கம் மக்களால் அதிகமாக உணரப்படுகிறது.
வெப்ப அலை, வெப்ப அழுத்தம், ஒப்பு ஈரப்பதத்தின் அதிகரிப்பு போன்றவை வெப்பநிலை அதிகமாக உணரப்படுவதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெப்பநிலையின் அளவு அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் உருவான புயல்கள், காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கடலின் வெப்பநிலை போன்றவற்றால் தமிழ்நாட்டில் இரண்டு முதல் நான்கு டிகிரி அளவிற்கு வெப்ப நிலையில் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 20 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. சென்னையில் மட்டும் 2வது நாளாக நேற்றும், வெப்பம் சதத்தைத் தாண்டியுள்ளது. நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் பகுதிகளில் 105 டிகிரி செல்சியஸ் அதாவது 44 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் 20 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலாக வெப்பம் பதிவாகி உள்ளது.
சென்னையில் 106 டிகிரி என்ற அளவில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், எப்போது குறையும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிகளவு வெப்பநிலை மற்றும் வெப்ப அழுத்தத்தின் காரணமாக அசெளகரியம் ஏற்படலாம் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயில் காலத்தில் அதிக அளவு நீர் அருந்துவது, நீர்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.