சபாநாயகர் பதவி மகிழ்ச்சியின் உச்சம்; வருத்தத்தின் மொத்தம்.. தனபால் உருக்கம்
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவதற்கு முன் பேசிய தனபால், சபாநாயகர் பதவியில் தான் மகிழ்ச்சியின் உச்சத்தையும் வருத்தத்தின் மொத்தத்தையும் அனுபவித்து விட்டதாக கூறினார்.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவியில் இருந்து தனபாலை நீக்க கோரி, திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்ததார். தீர்மான மீது பேசிய தனபால் தான் இரண்டு முறை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருவதாக தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக சபாநாயகராக பதவியேற்று பணியாற்றிய போது நடுநிலையோடு பணியாற்றியதாக கூறி ஜெயலலிதா என்னை பாராட்டினார் என்று அவர் கூறினார்.
அந்த தருணம் நான் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்த தருணம் என்ற தனபால், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு இரங்கல் குறிப்பை வாசித்த தருணம், தம்மை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்திய தருணம் என குறிப்பிட்டார். சபாநாயகர் பதவியில் மகிழ்ச்சியின் உச்சத்தையும் வருத்தத்தின் மொத்தத்தையும் அனுபவித்து விட்டேன். இந்த தீர்மானம் மீது எடுக்கப்படும் முடிவு எனக்கு எந்த மகிழ்ச்சியையும், வருத்ததையும் தந்துவிடாது என தனபால் கூறினார்.

