“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்

“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக பதவி வகித்த பி.எஸ்.ஞானதேசிகன் இன்று காலமானார், அவரின் வாழ்க்கை வரலாறினை பார்ப்போம்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவராக பதவி வகித்த, தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான பி.எஸ்.ஞானதேசிகன் இன்று காலமானார், அவருக்கு வயது 71. இவர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் பொறுப்பாளராகவும்  பல பதவிகளை வகித்தவர்.

சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ மற்றும் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற இவர், வழக்கறிஞராகவும், அதன்பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தும் செயல்பட்டு வந்தார். 1996 ஆம் ஆண்டில் ஜி.கே.மூப்பனார் காங்கிரஸில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கியபோது அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக பதவி வகித்தார். அதன்பின்னர் தமாகா காங்கிரஸிடன் இணைந்த பின்னர் 2001 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியில் இருந்தார்,

மேலும் இவர் 2011 முதல் 2014 ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் செயல்பட்டார். 2014இல் ஜி.கே.வாசன் காங்கிரஸில் இருந்து பிரிந்து, மீண்டும் தமாகா-வை தொடங்கியபோது இவரும் அக்கட்சியில் இணைந்து கட்சியின் துணைத்தலைவராக பதவி வகித்து வந்தார். விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரை சேர்ந்த இவருக்கு திலகவதி என்ற மனைவியும், விஜய், பிரசாந்த் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

ஜி.கே.மூப்பனார் மற்றும் ஜி.கே.வாசனின் நம்பிக்கைக்குரிய நபராகவும், அனைத்து கட்சித்தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் இன்முகத்துடன் பழகும் குணமும் கொண்டவர் இவர். கடந்த நவம்பர் மாதம் 11ஆம் தேதி முதல் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவந்த அவருக்கு நேற்று மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

ஞானதேசிகனின் உடல் நாளை சனிக்கிழமை மதியம் சென்னை பெசண்ட் நகர் இடுகாட்டில் அடக்கம் செய்யப்படவுள்ளது. இவரின் மறைவு காரணமாக தமாகா கட்சி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என்றும், கட்சிக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கப்பவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமாகா தலைவர் ஜி,கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் உள்ளிட்ட  பல்வேறு கட்சியின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.       

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com