இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது
Published on

சென்னையில் நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கிண்டியில் அமைச்சர் செங்கோட்டையன் உடன் இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும், சமவேலை, சம ஊதியம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி(திங்கட்கிழமை)  இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அவர்களை கைது செய்த போலீசார் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு இடைநிலை ஆசிரியர்கள் மைதானத்தில் இருந்தபடியே தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர், அங்கிருந்து வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள மாநகராட்சி பெண்கள் பள்ளி வளாகத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கும் ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்தது. போராட்டம் இரண்டு நாட்கள் கடந்த பிறகு பல ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இடைநிலை ஆசிரியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து, அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் பழச்சாறு அருந்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். 

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com