வலுவிழக்கும் ‘ஷக்தி’ புயல்.. தமிழகத்தில் அக்.9 வரை கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் வரும் 9ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 9ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகப் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்றுமுதல் அக். 9 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும், நாளை மறுநாள் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. அக்.5, 6-ஆம் தேதிகளில் குமரிக்கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ’ஷக்தி’ தீவிர புயல், குஜராத்தின் துவாரகாவிலிருந்து மேற்கே சுமார் 820 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டு உள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில், மேலும் மேற்கு-தென்மேற்குத் திசையில் நகர்ந்து,படிப்படியாக வலுவிழக்ககூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.