தமிழகத்தில் 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கணிப்பு!
தமிழ்நாட்டில் வரும் 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. 25ஆம் தேதி முதல்27ஆம் தேதி வரை, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27ஆம் தேதி வரை தமிழகம், புதுவை,காரைக்காலில், அதிகாலையில் லேசானபனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனிக்கான எச்சரிக்கை நீடிக்கிறது. அம்மாவட்டத்தில் இரவு அல்லது அதிகாலையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட, 2-4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் எனவும் கணித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் அதிகபட்ச வெப்ப நிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் கூறியுள்ளது. குறைந்தபட்ச வெப்ப நிலை, 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

