பரபரப்பான சூழலில் தமிழக அரசியல்.. அடுத்தது என்ன?
ஆளும் கட்சியான அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சில எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரித்தால், என்னவெல்லாம் நடைபெற வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து தற்போது காணலாம்.
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஜெயலலிதாவின் மறைவால் ஒரு இடம் காலியானதை அடுத்து, மொத்த இடங்களின் எண்ணிக்கை 233 ஆக குறைந்துள்ளது. அதன்படி பேரவையில் தற்போது அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 135 ஆகும். 89 திமுக உறுப்பினர்களும், 8 காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் உள்ளனர். இந்நிலையில், தற்போது உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைப் படி, அதிமுக உறுப்பினர்கள் 118 பேரின் ஆதரவு இருந்தால் மட்டுமே, அறுதிப்பெரும்பான்மையுடன் சசிகலா ஆட்சி அமைக்க முடியும்.
ஒருவேளை, 18 உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டால், சசிகலாவுக்கு ஆதரவான அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 116 ஆக குறைந்துவிடும். இதன் மூலம், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்படும்.

