“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை
ஆளுநர் அலுவலகம் அளித்த புகார் தொடர்பாக நக்கீரன் ஊழியர்கள் யாரையும் தற்போதைக்கு கைது செய்யமாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.
நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் நக்கீரன் இதழில் வெளியான கட்டுரை, ஆளுநரின் பணியில் இடையூறு ஏற்படுத்தும் விதமாக உள்ளதென்று, புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்ட 36 பேர் மீது ஜாம்பஜார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஊழியர்கள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
நீதிபதி, எம்.தண்டபாணி முன்னிலையில் இந்த வழக்கு விசரணைக்கு வந்தது. பத்திரிகைகள் மீது அவதூறு வழக்கு மட்டுமே தொடரமுடியும் எனக்கூறிய நீதிபதி, பிரிவு124 இன் கீழ் வழக்கு பதிவு செய்தது எப்படி என கேள்வி எழுப்பினார். வழக்கு குறித்து பதிலளிக்க கால அவகாசம் தேவைப்படுவதால், அதுவரை நக்கீரன் ஊழியர்களை கைது செய்யமாட்டோம் என காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வரும் 25ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.