கருணாசை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்.எல்.ஏ கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 16-ஆம் தேதி சென்னையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருணாஸ், காவல்துறையினரையும் முதலமைச்சரையும் விமர்சித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து கருணாஸை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கருணாஸ், புழல் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து, ஜாமின் கோரி கருணாஸ் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், கருணாசை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு செய்யப்பட்டுள்ளது. அந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.