
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கொடிக்கம்பம் நடுதல், ஹெல்மெட் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இலவசமாக ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி, அன்னதானம் வழங்குதல் உள்ளிட்டவற்றை அவிநாசி ஒன்றிய மாணவர் அணித் தலைவர் அமீன் என்பவர் ஏற்பாடு செய்து அவிநாசி காவல் துறையினரிடம் அனுமதி கோரியிருந்தார்.
அதேபோல் தளபதி விஜய் இளைஞர் அணி சார்பில் மாவட்ட இளைஞரணி தலைவர் ஷாபி என்பவர் அவிநாசி புதிய பேருந்து நிலையம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை 50 வாகனங்களுடன் இருசக்கர வாகன பேரணி நடத்த அனுமதி வழங்க கோரியிருந்தார்.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிகழ்ச்சி நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக அவிநாசி போலீசார் கூறுகையில், ”அமீன் ஏற்பாடு செய்த அன்னதானம் மற்றும் ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஷாபி விண்ணப்பித்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான வாகனங்கள் கலந்து கொள்ளும் என்பதால் போதிய அவகாசம் இல்லாமல் மனு அளிக்கப்பட்டுள்ளது.
போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியாது என்பதால் அவரது மனுவை ஏற்கவில்லை எனவும் குறிப்பிட்ட வாகன பேரணிக்கு மட்டுமே அனுமதி மறுப்பு எனவும் அன்னதானம் ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.