விரைவுச் செய்திகள்: தமிழகத்தில் மழை | சட்டப்பேரவை கூட்டத்தொடர் | பாராலிம்பிக் பவினா

விரைவுச் செய்திகள்: தமிழகத்தில் மழை | சட்டப்பேரவை கூட்டத்தொடர் | பாராலிம்பிக் பவினா
விரைவுச் செய்திகள்: தமிழகத்தில் மழை | சட்டப்பேரவை கூட்டத்தொடர் | பாராலிம்பிக் பவினா

3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும்: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூன்று வேளாண் சட்டங்களும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் விவசாயிகள் நலனுக்கும் உகந்ததாக இல்லை என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் விளக்கமளித்திருக்கிறார்.

அதிமுக,பாஜக வெளிநடப்பு: வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க மறுத்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக, அதிமுக கட்சிகள் வெளிநடப்பு செய்தன. விவசாயிகளுக்கு எதிரான ஒரு தீர்மானம் என பாஜக கருத்து தெரிவித்திருக்கிறது. அதேபோல் அவசர கோலத்தில் வேளாண் சட்டத்தை திமுக எதிர்க்கக்கூடாது என எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசியிருக்கிறார்.

விவசாயிகள் மீதான போராட்ட வழக்குகள் வாபஸ்: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு எதிரான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது. எம்எல்ஏக்கள் வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோரின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் இதை அறிவித்திருக்கிறார்.

விக்ரஹா ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: 188 கோடி ரூபாய் மதிப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட "விக்ரஹா " ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

மீனவர்களிடையே மோதல்- காவல்துறை துப்பாக்கிச்சூடு: புதுச்சேரியில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவது தொடர்பாக இரு தரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

திமுக எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை: தலைவர்கள் புகழ்பாடுவதில் சட்டப்பேரவை நேரத்தை வீணடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

கலைக்கல்லூரியில் சேர குவிந்த மாணவர்கள்: கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரே நேரத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

600 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்: சேலத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு கடத்தப்பட்ட 600 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம்: தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழருக்கான முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அவர்கள் அகதிகள் அல்ல, உறுதுணையாய் நாமிருக்கிறோம் என்றும் சட்டப்பேரவையில் அவர் பேசியபோது தெரிவித்தார்.

80% பேர் டெல்டா வகை வைரஸால் பாதிப்பு: தமிழகத்தில் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் 80 சதவிகிதம் பேர் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்டிகைக்காலத்தில் கூட்டம் கூடுவதை தவிர்த்து மக்கள் அரசுக்கு ஒத்துழைக்க, மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கல்லூரி மாணவர்கள் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்: அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்தி கொண்டு தான் கல்லூரிக்கு வர வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.

போலி வலம்புரி சங்கை ரூ.2 கோடிக்கு விற்க முயற்சி: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் போலி வலம்புரி சங்கை 2 கோடி ரூபாய்க்கு விற்கும் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.

கல்லூரி மாணவி வன்கொடுமை - 5 பேர் கைது: கர்நாடகாவின் மைசூரு பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பயங்கரவாதிகளுக்கு அமெரிக்கா பதிலடி: ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படை ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் - வரலாறு படைத்த பவினா: பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் அரையிறுதியில் சீன வீராங்கனையை வீழ்த்தினார் இந்தியாவின் பவினா பென் படேல். டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என வரலாறு படைத்தார்.

சாதிக்க நினைத்தால் சாத்தியமில்லாதது ஏதுமில்லை: சாதிக்க நினைத்தால் சாத்தியமில்லாதது எதுவும் இல்லை என இந்திய வீராங்கனை பவினா பேட்டியளித்திருக்கிறார். இறுதிப்போட்டியில் தங்கம் வெல்வேன் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com