`மரு.அர்ச்சனா சர்மா இறப்புக்கு நீதி வேண்டும்’- தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்

`மரு.அர்ச்சனா சர்மா இறப்புக்கு நீதி வேண்டும்’- தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்
`மரு.அர்ச்சனா சர்மா இறப்புக்கு நீதி வேண்டும்’- தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்

மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கக் கோரியும், மருத்துவர்களை காக்கும் சட்டம் ஒன்றை உடனடியாக நிறைவேற்ற கோரியும் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையைச் சேர்ந்த மருத்துவர்கள் தமிழகத்தில் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் பழனிச்சாமி, செயலாளர் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் சுமார் 50 மருத்துவர்கள் கோவையில் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களை குற்றவாளிகளாக வழக்கு பதிவு செய்யும் இந்திய தண்டனை சட்டத்தில் மாற்றம் வேண்டும் என அவர்கள் போராட்டத்தில் வலியுறுத்தினர். போலவே ஓசூர், சேலம், மதுரை போன்ற இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

முன்னதாக, சில தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில், அவருக்கு பிரசவம் பார்த்து மருத்துவர் அர்ச்சனா சர்மா என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் மன உளைச்சலுக்கு உள்ளான அவர், பின் தற்கொலை செய்துகொண்டிருந்தார். தனது தற்கொலை கடிதத்தில் அவர், “என் மீது எந்தத் தவறும் இல்லை” எனக்கூறியிருந்தார். மருத்துவரொருவர் தற்கொலை செய்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை நாடு முழுவதுமுள்ள பிற மருத்துவர்களிடையே ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, `மருத்துவர் அர்ச்சனா சர்மா மீது தவறான வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்ட மருத்துவர் அர்ச்சனா சர்மாவின் குடும்பத்திற்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும்; மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்’ உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்தினர் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் அந்தப் போராட்டத்தில் அனைத்து புறநோயாளிகள் பிரிவு மற்றும் வழக்கமான மருத்துவ பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், திருவெண்காடு,  செம்பனார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து புறநோயாளிகள் பிரிவு மற்றும் வழக்கமான மருத்துவ பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்திய மருத்துவ சங்க மயிலாடுதுறை கிளைத்தலைவர் மருத்துவர் பாரதிதாசன், செயலாளர் மருத்துவர் சௌமித்யா பானு, பொருளாளர் மருத்துவர் அருண்குமார் மற்றும் இந்திய மருத்துவ சங்க மயிலாடுதுறை கிளை நிர்வாகிகள் ஏராளமான மருத்துவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இதேபோல இந்திய மருத்துவ சங்கம் ஓசூர் கிளையின் சார்பில் மருத்துவர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. அவர்களும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஓசூர் கிளையின் சார்பில் சுமார் 150 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

செய்தியாளர்களிடம் போராட்டம் குறித்து பேசிய மருத்துவர் பிரதீப்குமார், “இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகளை சுமத்திய போலீசாரின் மீது அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல மருத்துவர்கள் அவ்வப்பொழுது பொதுமக்களின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாவதால் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இறந்த ராஜஸ்தான் மாநில பெண் மருத்துவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வழங்குவதுடன் உரிய நீதி கிடைக்க வேண்டும். இல்லை என்றால் நாடு தழுவிய மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் எச்சரிக்கிறோம்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com