வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்திலா இப்படி? - வட மாநில தொழிலாளர்களுக்காக பேசிய வணிகர்கள்!
உண்மைக்கு புறம்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோக்களால் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர்கள் சங்கத்தினர் பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று (மார்ச் 1) திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சௌமியாவிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூல்ஜர் மற்றும் ஏர்ஜெட் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ லூம் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகிறார்கள்.
கடந்த மூன்று நாட்களாக வட இந்திய தொழிலாளர்கள் மத்தியில் தமிழ்நாட்டில் பெருமளவில் தமிழர்களால் வட இந்தியர்கள் தாக்கப்படுவது போன்ற தவறான, உண்மைக்கு புறம்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவது வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில அரசியல் கட்சியினர் இதுபோன்ற பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசி வருவதாகவும், வீண் வதந்திகளை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது தொழிலையும் தொழிலாளர்களையும் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி பாதுகாக்க வேண்டும் எனவும், மக்கள் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் கடை வீதிகளில் காவலர்கள் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் எனவும், வட இந்திய தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதியை கட்டுப்படுத்த வீண் வதந்திகளை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சென்னை ஓட்டல்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் வட மாநில தொழிலாளர்களை தாக்குவது மனிநேயமற்ற செயல் எனவும், வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் சகோதரத்துவம் எங்கே போனது எனவும், வட மாநிலத்தவரின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.