உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி
சாலை விபத்தில் உயிரிழந்தவருக்கு 3 ஆண்டாகியும் இழப்பீடு வழங்கப்படாத நிலையில் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
மாமண்டூரில் கடந்த 2011 ஆம் ஆண்டு அரசுப் பேருந்து மோதியதில் ஆனந்தன் என்பவர் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையாக 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்க, அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு பேருந்து கழகத்திற்கு மதுராந்தகம் நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பு வழங்கி மூன்று ஆண்டுகள் ஆகியும், இழப்பீடு தொகை தராததால் விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூரில் 08.10.2011 அன்று நடந்த சாலை விபத்தில் அரசுப் பேருந்து மோதி உயிர் இழந்த சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகை ரூபாய் 6 லட்சத்து 10 ஆயிரம் விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்து கழகம் தர வேண்டும் என்று 2014 ஆம் ஆண்டு மதுராந்தகம் சார்பு நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன் அளித்த தீர்ப்பின்படி மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை இழப்பிட்டு தொகையை வழங்காத அரசுப் போக்குவரத்து துறையைக் கண்டித்து அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய மதுராந்தகம் சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவத்சன் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தை நீதிமன்றம் ஜப்தி செய்தது.