தமிழக அரசின் லாபம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி வருகின்ற அக்டோபர் 18-ம் தேதி வரவுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது.
லாபம் ஈட்டியுள்ள தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம், நஷ்டம் அடைந்துள்ள நிறுவனங்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மின்சார வாரியம், அரசு போக்குவரத்து துறை, பாடநூல் கழகம் போன்ற நிறுவனங்கள் இந்த ஆண்டு லாபம் ஈட்டியுள்ளது. அதேபோல், வீட்டு வசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் ஆகிய துறைகளில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 69 ஆயிரம் பேருக்கு இந்த போனஸ் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டும், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.