லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான துணைவேந்தர் சஸ்பெண்ட்

லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான துணைவேந்தர் சஸ்பெண்ட்
லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான துணைவேந்தர் சஸ்பெண்ட்

லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை சஸ்பெண்ட் செய்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி லஞ்சம் வாங்கிய புகாரில் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்காக சுரேஷ் என்பவரிடம் துணைவேந்தர் கணபதி 30 லட்சம் ரூபாய் பெற்றதாகப் புகார் எழுந்தது. இதற்காக சுரேஷிடம் துணைவேந்தர் கணபதி 1 லட்சம் ரூபாய் ரொக்கம், 29 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தப் புகாரில், துணைவேந்தரின் வீடு மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது துணைவேந்தர் கணபதி லஞ்சம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

துணை வேந்தர் கணபதி கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழக அரசு ஏன் அவரை பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தது. சஸ்பெண்ட் செய்ய ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என்றும் சட்ட அமைச்சர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதியை சஸ்பெண்ட் செய்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  நடவடிக்கை எடுத்துள்ளார். அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை தொடரும் என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com