"பட்டியலின பெண் பதவியேற்க முடியாததுதான் சமூக நீதியா.." - கேள்விகளை அடுக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின்கீழ் 18 வகை கைவினை கலைஞர்களுடன் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ”விஸ்வகர்மாக்களுக்கு என்று அங்கீகாரம் கிடைக்கிறதோ அன்று தான் உறுதியான பாரதம் உருவாகும் என பிரதமர் மோடி நம்புகிறார். அதனால் அவர்களுக்கு தேவையான ஊக்கமும் சலுகைகளும் கிடைக்க வேண்டும் என பிரதமர் நம்புகிறார். இது ஒன்றும் வாய் வார்த்தை அல்ல.
இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் 18 வகையான கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு தொழில்நுட்ப உதவி பொருள் உதவி சிறு கடன் உதவி செய்வதுடன் விஸ்வகர்மா தொழிலாளர்கள் நாட்டில் கௌரவத்துடன் பெருமையுடன் வாழ வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இங்கு சிலர் அனைத்தையும் அரசியலாகவே பார்க்கின்றனர். மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். குலக்கல்வி திட்டம் என்பது தந்தை செய்யும் தொழிலை மட்டுமே மகன் செய்ய வேண்டும் என்ற தவறான பொய் பரப்புரை செய்து வருகின்றனர். அவ்வாறு செய்பவர்கள் யாரையும் ஒன்றுபட விடுவதில்லை. பட்டியலின மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.
நாளிதழில் வந்த செய்தியில் இந்துமதி என்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவராக பதவியேற்பதில் தடை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கான சமூக நீதி மறுக்கப்படுகிறது. இவர்கள்தான் சமூக நீதியை காப்பாற்றுகிறார்கள் என தங்களைப் பற்றி பரப்புரை செய்து வருகின்றனர்.
பின்தங்கிய வகுப்பினரை பற்றி நாம் கவலைப்பட வேண்டும். அவர்களுக்கான மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்” எனத் தெரிவித்தார்.